ECONOMYMEDIA STATEMENTPBT

நிபந்தனைகளை மீறிய வணிகர்களுக்கு 26 குற்றப்பதிவுகள்- சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் நடவடிக்கை

ஷா ஆலம், டிச 21- சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம் அண்மையில் மேற்கொண்ட ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையில் லைசென்ஸ் விதிகளை மீறி பல்வேறு குற்றங்களைப் புரிந்த உணவக உரிமையாளர்களுக்கு 26 குற்றப்பதிவுகள் வழங்கப்பட்டன.

எண்ணெய்க் கழிவு தடுப்புகளை அமைக்காதது, டைப்பாய்டு தடுப்பூசி பெறாதது மற்றும் லைசென்ஸ் இன்றி செயல்பட்டது உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாக மாவட்ட மன்றம் கூறியது.

உணவகங்கள் மற்றும் உணவு அங்காடிக் கடைகள் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது வர்த்தக லைசென்சில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணெய் கழிவு தடுப்பு மற்றும் முறையான பராமரிப்பு தொடர்பான அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. 

இவை தவிர, டையாய்டு தடுப்பூசி, உணவு கையாளும் பயிற்சி சான்றிதழ், லைசென்ஸ் ஆகிய சோதனைகளோடு கால்வாய் மற்றும் கடையின் சுற்றுப்புறங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் சோதனையிடப்பட்டது என்று அது தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தது.

இம்மாதம் 15ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில் மாவட்ட மன்றத்தின் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் துறை, அமலாக்கத் துறை, லைசென்ஸ் துறை, மதிப்பீடு மற்றும் சொத்து மேலாண்மைத் துறை ஆகியவை பங்கு கொண்டன.

வர்த்தகர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வர்த்தக லைசென்சில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்கும்படி மாவட்ட மன்றம் கேட்டுக் கொண்டது.


Pengarang :