ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோல குபு பாரு இடைத் தேர்தல்-  ஒற்றுமை அரசுக்கு ஆதரவாக மஇகா களமிறங்கும் – அன்வார் கூறுகிறார்

ஷா ஆலம், ஏப் 21 – வரும் மே மாதம்  11ஆம் தேதி நடைபெற உள்ள கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசு கூட்டணிக்கு உதவ பாரிசான் நேஷனல் பங்காளிக் கட்சியான மஇகா களத்தில் இறங்க உள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப் படுத்தினார்.

மஇகா தேசியத்  தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தனிப்பட்ட  முறையில் நம்மை அழைத்து  இடைத்தேர்தலில் கட்சியின் ஆதரவை உறுதிப் படுத்தியதாக அவர் சொன்னார்.

மஇகா தலைவரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது…   கோல குபு பாரு இடைத்தேர்தலில் களமிறங்குவதற்கான தனது ஆதரவை அந்த அழைப்பின் போது அவர் உறுதிப்படுத்தினார். ஊடகச் செய்தி (பிரசாரத்திற்கு மஇகா ஆதரவளிக்காது என்பது) பொய்யானது என்று அன்வார் சொன்னார்.

இன்று இங்குள்ள ஐடியல்   மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பார்ட்டி கெஅடிலான் ராக்யாட் கட்சியின்  25வது ஆண்டு நிறைவு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேசிய முன்னணி  வேட்பாளரை நிறுத்தாவிட்டால் கோல குபு பாரு இடைத் தேர்தலில்  பிரசாரம் செய்ய மாட்டோம் என்று மசீச  மற்றும் மஇகா ஆகிய கட்சிகள் பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இருப்பினும், மசீச  தேர்தல்  பிரச்சாரத்தில் தீவிரமாக பங்கேற்குமா என்பது குறித்து அன்வார் தெளிவு படுத்தவில்லை.

கோல குபு பாரு தொகுதி  இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 11ஆம் தேதி நடைபெறவுள்ளது.இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்  ஏப்ரல் 27ஆம் தேதியும்   தொடக்கக் கட்ட வாக்களிப்பு  மே 7ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையத்தின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கானி சலே அண்மையில் தெரிவித்துள்ளார்.


Pengarang :