ECONOMYHEALTHPBTSELANGOR

இலவச பரிசோதனையில் 51,000 பேர் பங்கேற்பு- 2,233 பேருக்கு நோய்த் தொற்று கண்டுபிடிப்பு

ஷா ஆலம், மே 28– இம்மாதம்  8ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை மாநிலத்தின்பல்வேறு சட்டமன்றத் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனையில் 2,233 பேருக்கு நோய்த் தொற்று இருப்பதற்கான சாத்தியம் கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலத்தின் 26 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அச்சோதனையில் மொத்தம் 50,898 பேர் பங்கேற்றதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தனது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுபாங் ஜெயா தொகுதியில் நடத்தப்பட்ட இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் மிக அதிகமாக அதாவது 5,096 பேர் பங்கேற்றதாக அவர் சொன்னார்.

எனினும், அவர்களில் 130 பேர் மட்டுமே நோய்த் தொற்றைக் கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம் ஸ்ரீ செத்தியா தொகுதியில் 2,445 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 177 பேர் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது என்றார் அவர்.

கடந்த மே மாதம் 10ஆம் தேதி டுசுன் துவா சட்டமன்றத் தொகுதியில் நடத்தப்பட்ட இலவச  பரிசோதனை இயக்கத்தில் மிக குறைவாக அதாவது 13 பேர் மட்டுமே நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் மேலும் சொன்னார்.

இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19  பரிசோதனை இயக்கத்தை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.


Pengarang :