ECONOMYHEALTHNATIONALPBT

66 விழுக்காட்டு மலேசியர்களுக்கு மட்டுமே விளையாட்டில் ஆர்வம்- ஆய்வு கூறுகிறது

கோலாலம்பூர், ஜூன் 25– மலேசியர்களில் 66.1 விழுக்காட்டினர் மட்டுமே விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ளதாக கடந்த 2019ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட விளையாட்டு கலாசாரம் மீதான ஆய்வு கூறுகிறது

மலேசியர்களின் விளையாட்டு மீதான ஈடுபாடும் மிதமான அளவிலேயே உள்ளது அந்த ஆய்வின் வழி தெரியவந்துள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ எம். நோர் அஸ்மான் தாயிப் கூறினார்.

போதுமான அளவு  அடிப்படை விளையாட்டு வசதிகள் இல்லாதது, வானிலை மற்றும் நேரமின்மை ஆகியவை மலேசியர்கள் விளையாட்டை தங்களின் வாழ்வியல் அங்கமாக ஆக்கிக் கொள்ள இயலாமல் போனதற்கு காரணம் என்று அவர் சொன்னார்.

நாங்கள் இவ்விவகாரம் மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதோடு கூடுதல் விளையாட்டு வசதிகளை உருவாக்குவதற்கும் விளையாட்டில் தீவிர ஈடுபாடு கொண்ட நாடு என்ற அந்தஸ்தை பெறுவதற்கும் உரிய நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறோம் என்றார் அவர்.

தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கோவிட்-19 நோய் பாதிப்பு, மக்களிடையே விளையாட்டு நடவடிக்கைகளை மறைமுகமாக கட்டுப்படுத்தியுள்ளதாக கூறிய அவர், இதன் காரணமாக எதிர்காலத்தில் விளையாட்டு கலாசாரம் மீதான மக்களின் ஆர்வம் மேலும் வீழ்ச்சி காணும் என்றார்.

இதனிடையே, விளையாட்டை வாழ்க்கையின் ஒரு அங்கமாக உருவாக்குவதற்கு ஏதுவாக விளையாட்டுத் துறை சேர்ந்த தரப்பினர் புதிய வியூங்களை கண்டுபிடிக்க வேண்டும் என்று மலேசிய ஹாக்கி சம்மேளனத்தின் துணைத் தலைவரும் மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் உதவித் தலைவருமான பேராசிரியர் டத்தோ டாக்டர் எஸ்.ஷாமளா கூறினார்.


Pengarang :