ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

பொதுமக்களின் வசதிக்காக நடமாடும் உணவு வங்கி-பந்திங் தொகுதி ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 23– உணவுப் பொருள்களை பெறுவதற்கு சைக்கிளில் வரும் மூத்த குடிமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்கில் நடமாடும் உணவு வங்கித் திட்டத்தை பந்திங் சட்டமன்றத் தொகுதி ஏற்படுத்தியுள்ளது.

தமது தொகுதியைச் சேர்ந்த பொதுமக்களில் பெரும்பாலோர் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள ஓரிட உணவு வங்கி மையத்திலிருந்து உணவுப் பொருள்களை சொந்தமாக பெற்றுச் செல்லும் அளவுக்கு வாகன வசதியைக் கொண்டிருக்கவில்லை என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லாவ் வேங் சான் கூறினார்.

வாகன வசதி இல்லாத போதிலும் உணவுத் தேவையை நிறைவு செய்வதற்காக சைக்கிளில் சேவை மையம் வந்து பொருள்களைச் சுமந்து செல்லும் முதியோரின் செயல்களைக் கண்டு தாம் மனம் வருந்தியுள்ளதாக அவர் சொன்னார்.

மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு  கோல லங்காட் நகராண்மைக் கழகத்தின் உதவியுடன் தமது தொகுதி சேவை மையம் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் நடமாடும் உணவு வங்கித் திட்டத்தை தொடக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உதவித் தேவைப்படுவோர் அதிகம் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட ஆறு பகுதிகளில் தமது தரப்பு உணவு விநியோக சேவையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

எங்கள் சேவை மையத்தின் வேன் அரிசி, மீகூன், சீனி, சமையல் எண்ணெய் மற்றும் மாணவர்களுக்கான எழுது பொருள்களுடன் குடியிருப்பு பகுதிகளுக்குச் சென்று உதவி தேவைப்படுவோரிடம் அதனை விநியோகிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் வழி உதவித் தேவைப்படுவோர் நீண்ட தொலைவு சைக்கிளில் வந்து உணவுப் பொருள்களை பெற்றுச்  செல்லவேண்டிய அவசியம் இனியும் இராது என்றார் அவர்.


Pengarang :