ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நோய்த் தொற்று கண்ட குடும்பத்தினருக்கு இலவச சுய பரிசோதனை கருவி- சிலாங்கூர் அரசு வழங்கும்

ஷா ஆலம், செப் 3– சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உமிழ்நீர் வழி சோதனை மேற்கொள்ளக்கூடிய 60,000 சுய பரிசோதனைக் கருவிகளை மாநில அரசு விநியோகிக்கவுள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள சமூக சேவை மையங்களிடம் இந்த பரிசோதனைக் கருவிகள் ஒப்படைக்கப்படும் என்று சுகாதாரத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று உறுதிபடுத்தப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் சுய கண்காணிப்பை மேற்கொள்வதில் இந்த உமிழ்நீர் சோதனைக் கருவி பெரிதும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

இந்த கருவியின் மூலம் எளிதாகவும் விரைவாகவும் சோதனை மேற்கொள்ள முடியும் என்பதோடு நோய்த் தொற்றினால் மற்றவர்கள் பாதிக்கப்படாமலிருப்பதையும் உறுதி செய்ய முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசு நிலையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு இந்த சுய பரிசோதனை கருவி விநியோகம் மேலும் கூடுதல் அனுகூலத்தை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த கருவியைப் பெறுவோர் தங்கள் உடல் நிலை தொடர்பான சோதனை முடிவுகளை மைசெஜாத்ரா செயலி வழி தெரிவிக்க வேண்டும் என்ற சுகாதார அமைச்சின் உத்தரவை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


Pengarang :