ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூர் வான் போக்குவரத்து கண்காட்சி- ஏற்பாட்டுப் பணிகள் 80 விழுக்காடு பூர்த்தி

சுபாங், நவ 24- சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான 2021 அனைத்துலக வான்போக்குவரத்து கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சீராக நடைபெற்று வருகின்றன.

இரு வாரங்களுக்கு முன்னர் தொடங்கிய ஏற்பாட்டுப் பணிகள் 80 விழுக்காடு வரை பூர்த்தியாகியுள்ளதாக இன்வெஸ்ட் சிலாங்கூர் சென்.பெர்ஹாட் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ ஹசான் அஸ்ஹாரி இட்ரிஸ் கூறினார்.

கண்காட்சிக் கூடங்களை அமைப்பதற்கான கூடாரங்களை தயார் செய்வது மற்றும் விமானங்களை நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்வது போன்ற பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில அரசு முதன் முறையாக ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்வு நாளை தொடங்கும் நிலையில் அந்நிகழ்வு சீராக நடைபெறுவற்கு ஏதுவாக முன்னேற்பாடுகள்  முறையாக இருப்பதை உறுதி செய்யும் பணியில் தாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த நிகழ்வு வெற்றிகரமாக நடைபெறுவதற்கு ஏதுவாக  வான் போக்குவரத்து துறையினரும் பொதுமக்களும் ஆதரவு நல்குவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார் அவர்.

இந்த கண்காட்சியில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 43 கண்காட்சியாளர்கள் பங்கேற்பதாக  கூறிய அவர், துருக்கி, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகளும் தங்களின் பங்கேற்ப உறுதி செய்துள்ளதாக சொன்னார்.

இந்த மூன்று நாள் கண்காட்சியில் 15 விமானங்களும் காட்சிக்கு வைக்கப்படும். தனியார் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் இலகு ரக விமானங்களும் இதில் அடங்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த கண்காட்சியை முன்னிட்டு  வான் போக்குவரத்து துறையிருடனான கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கருத்து பரிமாற்ற நிகழ்வுகளும் மாணவர்களுக்கான நடவடிக்கைகளும் இடம் பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.


Pengarang :