ALAM SEKITAR & CUACAECONOMYNATIONALSELANGOR

வெள்ளத்திற்குப் பிந்தைய குப்பைகளைப் பிரித்தெடுப்பது இயலாத காரியம்- இங் ஸீ ஹான் கூறுகிறார்

ஷா ஆலம், மார்ச் 18– சிலாங்கூரில் வெள்ளத்திற்குப் பின்னர்க் குவிந்த 48,000 மெட்ரிக் டன் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் பணிகளைக் கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம்  மேற்கொள்வது இயலாத காரியம் என மாநிலச் சட்டமன்றத்தில்  கூறப்பட்டது.

அந்தக் குப்பைகளில் பல்வேறு பொருள்கள் கலந்திருந்த காரணத்தால் அவற்றைத் தரவாரியாகப் பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

மாநில அரசின் உத்தரவுகேற்ப பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து குப்பைகளை விரைந்து அகற்றுவதே அந்த நிறுவனத்தின் தலையாய பணியாக இருந்தது என்று அவர் சொன்னார்.

அந்த .குப்பைகளில் பல்வேறு பொருள்கள் கலந்து துர்நாற்றம் வீசியதோடு சகதியும் சேர்ந்திருந்த காரணத்தால் அதனைத் தரம் பிரிப்பது சிரமமானது என்பதோடு நடைமுறைக்கும் சாத்தியமற்றதாகவும் இருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

மாநிலச் சட்டமன்றத்தில் இன்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் அவர்களின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் பேசிய செமந்தா உறுப்பினர் டாக்டர் டோரோயா அல்வி, கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனம் மற்றும் ஊராட்சி மன்றங்கள் மேற்கொண்ட துப்புரவுப் பணியில் குப்பைகளைப் பிரித்தெடுக்கும் விவகாரம் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனக் கூறியிருந்தார்.

அந்த இயற்கைப் பேரிடரின் போது சமூகவியல் விளைவுகளுக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக இங் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :