ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENT

மக்களின் நிதிச்சுமை கருதி பாக்கெட் சமையல் எண்ணெய் விலையை அரசு தொடர்ந்து நிலை நிறுத்தும்

ஷா ஆலம், ஜூன் 8- மக்களின் வாழ்க்கைச் செலவின குறைக்கும் நோக்கில் உதவித்தொகை வழங்கப்பட்ட சமையல் எண்ணெய்க்கான விலையை உயர்த்த அரசாங்கம் எண்ணம் கொண்டிருக்கவில்லை.

நிச்சயமற்ற பொருளாதார நிலை காரணமாக பொதுமக்கள் இன்னும் சிரமத்தில் ஆழ்ந்திருப்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளதாக வர்த்தக மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சலாவுடின் ஆயோப் கூறினார்.

குடும்பத்தைப் பராமரிப்பதில் மக்கள் இன்னும் சிரமத்தில் உள்ளதால் எந்தவொரு விலையேற்றத்தையும் அறிவிக்க அரசாங்கத்திற்கு இன்னும் காலம் கனியவில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆகவே, பாக்கெட் சமையல் எண்ணெய்க்கான உதவித் தொகையை குறைக்கவோ அந்த அத்தியாவசிய உணவுப் பொருளுக்கான விலையை உயர்த்தவோ அரசாங்கம் திட்டமிடவில்லை என்று அவர் மேலும் சொன்னார்.

மக்களவையில் இன்று பாக்கெட் சமையல் எண்ணெய் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு அமைச்சு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஷா ஆலம் தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் அஸ்லி யூசுப் எழுப்பிய  கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

பாக்கெட் சமையல்  எண்ணெய் பற்றாக்குறை பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதமாக கிலோ 2.50 ஆக இருக்கும் அந்த சமையல் பொருளின் விலையை மேலும் ஒரு வெள்ளி உயர்த்தவும் அஸ்ரி யூசுப் பரிந்துரைத்தார்.

மானிய விலை சமையல் எண்ணெய் மக்களுக்கு நியாயமான முறையில் கிடைப்பதை உறுதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட  மானிய விலை விற்பனை திட்டத்தை இவ்வாண்டு இறுதிவாக்கில் அறிமுகம் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று சலாவுடின் கூறினார்.


Pengarang :