ECONOMYMEDIA STATEMENTPBT

 ஜப்பான் நிலநடுக்கம்- பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு- 211 பேர் காயம்

தோக்கியோ, ஜன 6 – மத்திய ஜப்பான் மாநிலமான இஷிகாவாவில் ஏற்பட்ட  7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து  மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப் பட்டுள்ள நிலையில் அங்கு உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சனிக்கிழமை நிலவரப்படி இஷிகாவாவில் மொத்தம் 100 பேர் இந்த பூகம்பத்திற்கு பலியாகியுள்ள நிலையில் மேலும் 211 பேர் காணாமல் போயுள்ளதாக  உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்தின் ஆறாவது நாளான நேற்று  மிகவும் பாதிக்கப்பட்ட கடலோர நகரமான வாஜிமாவில்  59 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  கட்டிடங்களின் இடிபாடுகளில்  மக்கள் சிக்கியிருப்பது அல்லது புதைந்துள்ளது குறித்து பற்றிய 100 புகார் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

நில அதிர்வுகள் இன்னும் அப்பகுதியை உலுக்கி வருகிறது.  உள்ளூர் நேரப்படி இன்று  காலை 5.25 மணிக்கு   நோட்டோ பிராந்தியத்தில்  10 கிலோ மீட்டர் ஆழத்தில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக   ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (ஜேஎம்ஏ) கூறியது.

இப்பகுதியில்  சனிக்கிழமை கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால்  நிலச்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு உள்ளூர்வாசிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலை 8.00 மணி நிலவரப்படி 14 நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் சுமார் 24,000 வீடுகள் மின்சாரத் தடையை எதிர்கொண்டதோடு, 66,000 குடும்பங்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலை  ஏற்பட்டது. இஷிகாவா மாநிலத்தில் உள்கட்டமைப்பு கடுமையான சேதத்தை சந்தித்துள்ளது என்று தேசிய செய்தி நிறுவனம் கியோடோ தெரிவித்துள்ளது


Pengarang :