ECONOMYSELANGOR

செந்தோசா தொகுதி ஏற்பாட்டில் ‘60 நாட்களில் ஆரோக்கிய வாழ்வு‘ போட்டி நிகழ்வு

கிள்ளான், மார்ச் 4- செந்தோசா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் 60 நாட்களில் ஆரோக்கியமான வாழ்வு எனும் போட்டி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் ஆரோக்கிய வாழ்வு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுவதோடு  60 நாட்களில் உடை எடையைக் குறைப்பவர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

உடலாரோக்கியத்தை உறுதி செய்வதன் மூலம் நோய் நொடியிலிருந்து விடுபட்ட  சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இங்குள்ள செந்சோசா சட்டமன்றத்  தொகுதி சேவை மையத்தில் இந்த ஆரோக்கிய போட்டி நிகழ்வைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த போட்டியை முன்னிட்டு உடல எடையைக் குறைப்பது தொடர்பான பயிற்சிகளும் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும். இந்த பயிற்சிகளை அனுபவமிக்க பயிற்றுநர்கள் வழஙகுவர் என்றார் அவர்.

இந்த போட்டியில்  21 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட தொகுதியைச் சேர்ந்த ஆண், பெண் இருபாலரும் பங்கு கொள்ளலாம். அறுபது நாட்களில் எடையைக் குறைப்பவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இப்போட்டியில் முதல் நிலை வெற்றியாளருக்கு 1,000 வெள்ளியும் இரண்டாம் நிலை வெற்றியாளருக்கு 700 வெள்ளியும் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு 500 வெள்ளியும் அடுத்த நிலைகளில் வருவோருக்கு 300 வெள்ளி மற்றும் 100 வெள்ளியும் பரிசாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 8ஆம் தேதியிலிருந்து மே மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிக்கு 20 வெள்ளி நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த நுழைவுக்கட்டணம் சொந்தோசா தொகுதியிலுள்ள அன்பு இல்லத்தின் பராமரிப்புப் பணிக்கு பயன்படுத்தப்படும்.


Pengarang :