ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தாமான் டெம்ப்ளர் தொகுதியில் 2,600 பேருக்கு தடுப்பூசி

கோம்பாக், ஜூலை 26- செல்வேக்ஸ் எனப்படும் சிலாங்கூர் மாநில அரசின் தடுப்பூசி திட்டத்தின்  வாயிலாக தாமான் டெம்ப்ளர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சுமார் 2,600 பேர் தடுப்பூசியைப் பெறுவர்

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தில் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், சிறு வணிகர்கள், உணவு விநியோகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்போருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தொகுதி உறுப்பினர் முகமது சானி ஹம்சான் கூறினார்.

இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு பெறுவோரை அடையாளம் காணும் பணி கிராமத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் இரண்டு வாரங்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த தடுப்பூசித் திட்டத்தில் பங்கு பெறும் அனைவரும் மைசெஜாத்ரா செயலி வாயிலாக தடுப்பூசி பெறுவதற்கான தேதியைப் பெறாதவர்களாக இருப்பதை தாங்கள் உறுதி செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இன்று சுமார் 1,300 பேருக்கு சினோவேக் தடுப்பூசியைச் செலுத்த இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில் பிற்பகல் 1.00 மணி வரை 60 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்று விட்டனர் என்றார் அவர்.

இங்குள்ள ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் இயக்கத்தை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தடுப்பூசி செலுத்தும் இயக்கம் சீராக நடைபெறுவற்கு ஏதுவாக பொதுமக்கள் செலங்கா செயலி வாயிலாக வழங்கப்பட்ட தடுப்பூசி பெறுவதற்கான  நேரத்தில் மண்டபத்திற்கு வந்து விடும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த கோவிட்-19 நோய்த் தொற்று மனிதர்கள் மத்தியில் வாழ்வா? சாவா? போராட்டத்தை ஏற்படுத்தி விட்டது. இதனைக் கருத்தில் கொண்டு சிலாங்கூர் அரசு சொந்தமாக தடுப்பூசித் திட்டத்தை மாநில மக்களுக்காக அமல்படுத்தியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.

 


Pengarang :