ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONALPBT

செல்வேக்ஸ் பூஸ்டர் திட்டத்திற்கு வரவேற்பு- தடுப்பூசிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க கோரிக்கை

ஷா ஆலம், ஜன 17- பண்டமாரான் தொகுதி நிலையில் நேற்று நடைபெற்ற செல்வேக்ஸ் பூஸ்டர் ஊக்கத் தடுப்பூசித் திட்டத்தில் 928 பேர் பங்கு கொண்டனர்.

நேற்றைய நிகழ்வில் இணையம் வழி பதிவு செய்தவர்களை விட நேரில் வந்தவர்களே அதிகம் என்று பண்டமாரான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டோனி லியோங் தக் சீ கூறினார்.

இத்திட்டத்திற்கு மகத்தான ஆதரவு கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஊக்கத் தடுப்பூசியைப் பெறுவதற்காக சிலர் காலை 7.30 முதலே வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர் என்றார் அவர்.

தடுப்பூசியை பெறுவதற்கு மைசெஜாத்ரா வழி சிலருக்கு தேதி கிடைத்திருந்த போதிலும் அதிக நாள் காத்திருக்க வேண்டிய காரணத்தால் செல்வேக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசி பெற அவர்கள் இங்கு வந்திருந்தனர். நாங்கள் ஹெல்ப்டெஸ்க் தொலைபேசி சேவையின் வாயிலாக அவர்களின் தடுப்பூசிக்கான முன்பதிவு ரத்து செய்ய உதவினோம் என்று லியோங் சொன்னார்.

இதிட்டத்திற்கு கிடைத்துள்ள ஊக்கமூட்டும் ஆதரவைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தடுப்பூசித் திட்டத்தை மேற்கொள்வதற்கான சாத்தியம் குறித்து மாநில அரசு பரிசீலிக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மாநில அரசிடம் போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பு இருந்தால் வரும் காலத்தில் இது போன்ற திட்டத்தை மேற்கொள்வதற்கான ஏற்பாட்டைச் செய்ய நாங்கள் தயாராக உள்ளோம் என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் கடந்த மாதம் 17 ஆம் தேதி முதல் 7 தொகுதிகளில் செல்வேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.


Pengarang :